
முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா
தீயின் வனப்படுப்பை உடல் ஏற்றியிருக்க
கானகம் மறுத்த இலைகளே சருகுகள்
இலை முதிர்ந்த வனம் கோட்டின்
விதிகளால் பழுப்பேறுகின்றன.
முதிர் காக்கையின் கண்களில் ஊடிச்
செல்லும் ஒரு வனத்தின் காகிதம் கூடவே.
புழக்கத்தில் இல்லாத முகம் அதில் வரும்.
மேய்ச்சலில் தளர்ந்த அந்தி வர்ணமோ
புகழிடச் சிகையென பூக்கள் உதிர்க்கும்.
அதுபோல் தான் அன்று இறகுத் தாத்தா
வந்ததும்.
வந்ததும் முற்றத்து வீட்டு ஆளோடியில்
அடைந்து கொள்வார்.
நாழி ஓடுகள் வெய்யப்பட்ட விதானம்,
வீட்டில் எஞ்சிய வெற்றுவெளி
ஆகாயமாய் திரளும் யுவப்பருவம்.
வீதிகளில் அவர் உலாவித் திரிய,
தெரு முகட்டில் வந்து நின்று பவ்வியமாக
நோக்கும் அண்ணம்மாள்.
உடல் முழுவதும் பூக்கள் முளைக்க
வனாந்திர நங்கையின் உதிரம்
நனைத்தெடுத்த பை.
ஒரு புள்ளியிலிருந்து விரியும் பூவைப் போல்
துகல் மகரந்த செயற்கையில்
பரந்து விரிந்த நிலக்கூட்டின்
மனிதச் சிராய்கள்.
மறைந்து திரியும் வெண் சுவடுகளை
அழுக்காய் பதிக்கும் முகில்களை
கழுவியெடுக்கும் மென் தூறல் உருவாய்
அவள் இருந்தாள்.
தாத்தாவின் தலை முடி அடர்ந்து,
சித்திரை மாதத்தில் பூக்கும்
இளவம்பஞ்சுப் போலானது.
தலைக்கு மேல் மேகத்தை அவர்
சுமக்க ஆரம்பித்ததும் தான் உணர்ந்தார்
தனது முதுமையை.
முதுமையில் தீர்க்கம் வெண்ணிறத்தால்
மெய்மை வெளிப்படவே செய்தது.
ஆனாலும் தனது முதுமையை ஏற்க
அவருக்கோ மனம் கொள்ளவில்லை.
அவரது சிரசத்தில் மயிர்கள்
வெண்ணிறம் எய்தியிருந்தாலும்
அடர்த்திக்கொண்டிருந்தது.
தாத்தாவின் பதிவிரதைக்கோ
கண்களை உருட்டி மிரட்டும்
அவரது விழிகளுக்கு அஞ்சி ஒடுங்குவாள்.
அறையின் ஓரத்தில் நைந்துப் போன
மிருதங்கம் அவளைப் போலவே கிடந்தது.
உழுத்துபோன முற்றத்து விட்டத்தின் மீது
இறகுத் தாத்தா போய் அமர்ந்தார்.
காட்டின் இறகான அந்த விட்டம்
மெல்ல அசையத் தொடங்கியது.
இறகுத் தாத்தாவைக் காட்டிலும்
கனத்த இறகாய் அந்த
விட்டம் இருந்தது.
அந்த விட்டத்தில் இருந்த குயிலைக்
காட்டிலும் அந்த விட்டம்
அதிகமாக சிறகடித்தது.
விட்டத்தின் மேலிருந்த நாழி
ஓடுகளின் பிறழ்வு.
விதானம் கலைந்து
வானத்தின் கண்ணாடிகளாகின.
விட்டத்தின் ஓரமாய் இருந்த
பலகையில் மண் பானை அடுக்கு,
முன்னொரு காலத்தில் அவர்
பயணம் மேற் கொண்டிருந்த
தூரப்பிரதேசத்தில் இறகுகள்
முளைத்த மனிதர்களின் இறகுகளை
சேகரித்து அதில் வைத்திருந்தார்.
தூர தேசத்திலிருந்து பறந்து வந்த
அந்த இறகுகள் தாள்களாக
அதனுள் வேடமிட்டிருந்தன.
விடியல் புலர்ந்த வேளை
தாத்தாவின் பதிவிரதை
எழுந்து பார்த்த போது
தாத்தாவைக் காணவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் தாத்தா
வீடு திரும்பவில்லை.
நாட்கள் கடந்தன.
தடமற்ற வழிகளின் ஊடாக சுருதியற்ற
தனது கண்களால்
தேடத் தொடங்கினாள்.
பாதங்கள் வழி நடந்தவளை
மீத தூரமும் அழைத்தது.
நீலம் பரவிக் கிடந்த வான்வெளியில்
சிற் சில மேகத்துளிகள்
உருண்டோடிக் கொண்டிருந்தன.
திசைகளற்ற பயணவெளிக்குள்
மேகத்தினூடாக தொடர்ந்தது
அவளது பயணம்,
இறகழியும் மேகம் போல்
கரைந்து கொண்டிருந்தது.
இரக்கமற்ற இரவு அவளை
துயிலடைய விடவில்லை.
விழிகளை களைத்து போட்டன
திரவப்பூச்சிகள்.
மரணத்தின் கொடுவாயில்
கண்களில் படர,
இலவம் பஞ்சு துகள்
இறகுகளாக முற்றத்து
தாழ்வார உத்திரத்தில்
பதிந்திருந்தது.
தாத்தாவை மட்டும்
காணவில்லை.
1 comment:
இந்தக் கவிதைக்கு கருத்துப் போடும் அளவுக்கு எனக்கு கவிதையைப் பற்றித் தெரியாது
மிக அழகான கவிதை.
//மறைந்து திரியும் வெண் சுவடுகளை
அழுக்காய் பதிக்கும் முகில்களை
கழுவியெடுக்கும் மென் தூறல் உருவாய்
அவள் இருந்தாள்.//
//விழிகளை களைத்து போட்டன
திரவப்பூச்சிகள். //
பல வரிகள் அற்புதமாக இருக்கிறது..
Post a Comment