Thursday 18 June, 2009

புத்தக விமர்சனம்


புத்தக விமர்சனம்


மரணத் தடம்

தாமஸ் மன்

தமிழில் : க. செண்பகநாதன்


மரணத்தடம் / மொழிபெயர்ப்பு நாவல்/ © தாமஸ் மன் /
மொழிபெயர்ப்பு : செண்பகநாதன் / முதல் பதிப்பு : நவம்பர் 2008 /
வெளியீடு : கண்ணி பதிப்பகம், 17 B தென் வெட்டுக்காரத் தெரு,
தஞ்சாவூர், 613001 /அச்சாக்கம்: பாவை பிரிண்டர்ஸ், சென்னை/
பக்கம் : 96 / விலை : ரூ. 60

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

தாமஸ் மன் 1875 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லூபெர்க் நகரத்தில் பிறந்தார். செனட்டராக இருந்த ஜேகனன் ஹெயின் ரிச்க்கு இரண்டாவது மகனாக தாமஸ் மன் பிறந்தார். அவரது தந்தை தானிய வியாபாரியாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி ஜூலியா டி சில்வா புரூகன்ஸ் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்றபோதிலும் அவரது மூதாதையர்கள் ஜெர்மன் வம்சாவளிக் கலப்பினர். ஜூலியாவிற்கு ஏழு வயதாக இருந்த போது அவர்களது குடும்பத்தினர் ஜெர்மனியில் குடியேறினார்கள். தாமஸ் மன்னின் தாய் ரோமன் கத்தோலிக்க இனத்தைச் சேர்ந்தவர். தந்தை லுத்தேரியன் நம்பிக்கையையும் கடைப்பிடித்து வந்தார். தாமஸ் மன்னின் தந்தை 1891 ஆம் ஆண்டு காலமான பிறகு வணிகத் தொழில் நீர்த்துப் போனதினால் அவர்கள் முன்ச் நகரத்திற்கு குடிப்பெயர்ந்தார்கள்.
லுபெர்க் ஜிம்னாஸியத்தில் அறிவியல் பிரிவில் இணைத்துக் கொண்டு பயிலத் தொடங்கிய தாமஸ் மன், தனது பெரும்பான்மையான நேரத்தை முன்ச் பல்கலைகழகத்திலேயே செலவளித்தார். அங்கு அவர் பத்திரிக்கை துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் கல்வி கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் தாமஸ் மன், முன்ச்யில் ஜெர்மனிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1894 முதல் 1895 வரை பணியாற்றினார். பாலஸ்தீன் மற்றும் இத்தாலி நாடுகளில் தனது சகோதரர் ஹென்ரிச் மன் உடன் இருந்த காலத்தைத் தவிர்த்து முன்ச்யில் 1891-யில் இருந்து 1933 வரை அவர் வசித்து வந்தார். அவரது சகோதரர் ஹென்ரிச் மன், நாவல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு தாமஸ் மன் 1933 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்தார். அப்போது ஜெர்மனியில் நாஜீக்களின் ஆட்சி நடந்துக் கொண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில் தாமஸ் மன்னுக்கு எதிரான கருத்து அங்கு உருவாக்கப்பட்டிருந்தது. அவர் 1833 ஆம் ஆண்டிலேயே வெளியேறினாலும் 1836 ஆம் ஆண்டு ஹிட்லர் அரசாங்கத்தால் முறைப்படி நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பான் பல்கலை கழகம் அவருக்கு அளித்த டாக்டர் பட்டத்தை 1937 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. பிறகு 1946 ஆம் ஆண்டு மீண்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமஸ் மன் 1940 ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனானார். அத்தருவாயில் 1941 முதல் 1953 வரை கலிபோர்னியாவில் உள்ள சான்த்தா மேனிக்கா என்ற இடத்தில் வசித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல முறை ஐரோப்பாவிற்கு அவர் பயணம் மேற் கொண்டார். பிறகு ஐரோப்பாவில் தங்கிவிட்ட அவர், சுவிட்சர்லாந்தில் ஜூருச் நகரத்தில் 1955 ஆம் ஆண்டு காலமானார்.
.தாமஸ் மன் தனது படைப்பியக்கத்தினை சிறுகதைலிருந்து தொடங்கினார். “simplicissimus”, என்ற ஜெர்மனிய வார இதழுக்காக அவர் “Little Herr Friedemann” சிறுகதையினை எழுதினார். அது 1898 ஆம் ஆண்டு பிரசுரமானது. அதுவே அவரது முதல் படைப்பாகும். பிறகு அவர் ரோம் நகரத்தில் இருக்கும் போது, "Buddenbrooks”என்ற நாவலை எழுத தொடங்கிய அவர், அதனை 1901 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதையடுத்து 1903 ஆம் ஆண்டு “Tristan,” என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டார். அதையடுத்து “Konigliche Hoheit(Royal Highness) என்ற நாவலை 1909 ஆம் ஆண்டும், Confessions of Felix Krull என்ற நாவலை 1922 ஆம் ஆண்டும் எழுதினார். இதனிடையே 1913 ஆம் ஆண்டு குறுநாவல் வடிவமான Tod in venedig(Death In Venice)யை எழுதினார்.
மரணத்தடம்(Death in venice)என்ற குறுநாவல் முதன் முதலாக 1912ம் ஆண்டு ஜெர்மன் மொழியில்(Der tod in venedig)பிரசுரமானது. அதன் பிறகு 1925ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. மரணத்தடம் நாவலின் கதாநாயகன் கஸ்டவ் வோன் அஸ்ஹென்பெச் தனக்கு ஐம்பது வயது வரை பிரபலமான நாவலாசிரியராக அறியப்படுகிறார். இளம் வயதிலேயே மனைவியை இழந்து வாழும் அஸ்ஹென்பெச், தன்னை ஓர் ஒழுக்கசீலராக கட்டமைத்துக் கொள்கிறார். இந்நாவல் ஒரு கல்லறையிலிருந்து துவங்குகிறது. அங்கு அவர் செந்நிற முடியுடைய முரட்டு மனிதனைக் காண்கிறார். அஸ்ஹென்பெச்சை அவன் வன்மத்துடன் உற்று நோக்குகிறான். அவன் உற்றுப் பார்ப்பதை அவமானமாக கருதிய அவர் அங்கிருந்து கடந்து செல்கிறார். பிறகு ஒரு தருணத்தில், சுற்றுப் பயணம் மேற்கொள்ள எண்ணுகிறார். அதையடுத்து வெனிஸ் செல்ல திட்டமிடுகிறார். அதற்காக லிடோ தீவில் உள்ள ஹோட்டல் டெஸ் பைய்ன்ஸில், முன்கூட்டியே அறைக்கு பதிவுசெய்கிறார். அந்த தீவுக்கு நீராவிப் படகு மூலம் செல்கிறார். அங்கு வயதில் மூத்த ஒருவரை சந்திக்கிறார். அந்த மனிதரோடு ஆரவாரமிக்க இளைஞர் பட்டாளமும் பயணம் செய்தது. இளைஞர்களுக்கு இணையாக தன்னை காட்டிக் கொள்ள விரும்பிய அந்த வயோதிகன், தன்னை இளைஞன் போல் பாவித்து, தலைக்குச் சாயமிட்டும், பொய்ப் பற்கள் கட்டியும் பகட்டேற்றியிருந்தான். அவனை ஒரு இளைஞன் என்று முதலில் நினைத்திருந்த அஸ்ஹென்பெச், பிறகு அவனது சுய ரூபத்தை அறிந்துகொண்டார். பிறகு ஒரு தருணத்தில் அஸ்ஹென்பெச் கான்டோலோ ஒன்றில் பயணம் மேற் கொள்ள வேண்டி இருந்தது. அதனை செலுத்துபவனும் செந்நிற முடிக் கொண்டவனாக இருந்தான். “உங்களை நல்ல முறையில் கொண்டு சேர்ப்பேன்,” என அவன் அவரை தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான். அவர் ஹோட்டலை அடைந்ததும், இரவு உணவின் போது உயர் வகுப்பு போலந்து குடும்பமொன்றைக் கண்டார். அந்த குடும்பத்தின் மூது அவருக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது.
அந்த குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். மாலுமிகள் உடுத்தக் கூடிய உடுப்பை அவன் அணிந்திருந்தான். மிக அழகாகவும் அவன் இருந்தான். அவனது பெயர் டாட்ஜியோ, அவனது சகோதரிகள் கன்னியாஸ்தீரிகளின் உடையில் இருந்தனர். அங்கிருந்த வெப்ப வானிலை மற்றும் ஈரக்காற்று அவரது உடலை பாதித்து நோயுற வைத்தது. அதனால் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த அவர், ஆரோக்கியமான இடத்திற்குச் செல்ல திட்டமிட்டார். அவர் புறப்படுவதற்கு எண்ணிய அந்த காலைப் பொழுதில் டாட்ஜியோவை பார்க்கிறார். அவன் மீது இனம் புரியாத உணர்வு அவருக்குள் மேலோங்குகிறது. அதை விடுத்து ரயில் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவரது பயணப் பேழை தவறுதலாக வேறு இடத்திற்கு சென்று விடுகிறது. கோபம் கொள்வது போல் நடிக்கிறார். ஆனால் உள்ளூற மகிழ்கிறார். இனி நாம் இங்கிருந்து செல்ல வேண்டியிருக்காது என்று எண்ணியவாறு மகிழ்ச்சியுடன் மீண்டும் விடுதிக்குச் செல்கிறார். தனது மூட்டை முடிச்சுகள் வரும்வரை வெனிஸில் தங்கிவிடலாம் என மனதார எண்ணுகிறார். அங்கிருந்து போய் விடும் முடிவையும் மாற்றிக்கொண்டு விடுகிறார். சில நாட்களிலேயே டாட்ஜியோ மீதான அவரது ஆர்வம் மோகமாக உருப்பெருகிறது. அவனைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அவன் செல்லும் இடமெல்லாம் அஸ்ஹென்பெச் ரகசியமாக பின் தொடர்வதுமாக வெனிஸ் முழுதும் சுற்றித் திரிந்தார். ஒரு மாலைப் பொழுதில் அவரை பார்த்து டாட்ஜியோ புன்னகைக்கிறான். அந்த புன்னகை, நார்சிசஸ் மலர் தன்னை நோக்கி எதிரொளிப்பதை போல் உணர்கிறார். உடனே அரவமற்ற பூங்காவுக்குள் ஓடி “நான் உன்னை காதலிக்கிறேன்,” என மெதுவாக தன்னந் தனியே கூறிக் கொள்கிறார். ஒரு முறை, வெனிஸ் நகரத்தின் உட் பகுதியில் அவர் பயணம் மேற் கொள்கையில், சுகாதார வாழ்வுத் துறையினர் அறிவிப்பை காண்கிறார். அந்த அறிவிப்பில், செதில் மீன்களை உண்ண வேண்டாம் என்றும், வெனிஸ் நகரத்தில் இனம் புரியாத நோய்த் தொற்று பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் அருவருக்கதக்க நாற்றம் அந்நகரம் முழுவதும் வீசக் கண்டார். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து திரிந்துக் கொண்டிருந்தார்கள். டாட்ஜியோ மீது இருந்த மோகத்தால் நோய் அபாயத்தை அவர் முதலில் கண்டு கொள்ளவில்லை. அப்போது தான் செந்நிற முடி வைத்திருந்த மூன்று நபர்கள் அவரைக் கடந்து சென்றனர். இந்த முறை அவரை கடந்து சென்றவர்களோ, மூன்று தெருப் பாடகர்கள் கொண்ட குழு, அவர்களில் ஒருவன் அஸ்ஹென்பெச்சை பார்த்த விதம் மரியாதைக் குறைவானதாக இருந்தது. ஓர் இரவுப்பொழுதில் அவர் தங்கியிருந்த விடுதியில் அந்த குழுவினர் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அப்போது டாட்ஜியோ பால்கனியின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்றிருந்தான். அவன் சாய்ந்திருந்த பாணி அழகுற இருந்தது. அப்போது அவன் மீது அவர் மோகபார்வையை வீசிக் கொண்டிருந்தார். அடுத்ததாக அஸ்ஹென்பெச், தனது சுய கௌரவத்தை வெளிக்காட்டும் முகமாக செயல் பட முனைந்தார். நகரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அறிக்கையைப் பற்றி டாட்ஜியோவின் தாயிடம் தெரிவிக்க முடிவு செய்தார். இத்தகைய நோய் சூழலுக்கு புழுதிக் காற்றே காரணமென்று கூறப்பட்ட வேளையில், வெனிஸ் நகரம் முழுவதும் காலரா பீடித்திருப்பதாக பிரிட்டிஷ் சுற்றுலா ஏஜென்ட் ஒருவன் தெரிவித்தான். இத்தகைய சூழ்நிலையில், டாட்ஜியோவின் தாயிடம் இதை தெரிவித்தால் அவன் இந்த விடுதியை காலி செய்துவிட்டு சென்றுவிடுவான். தன்னை விட்டு தொலைந்துவிடுவான் என்பதை எண்ணும் போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஓர் இரவுப் பொழுதில், டையமிசனின்(dionysian)* சல்லாபக் காட்சிகளை கனவாக அஸ்ஹென்பெச் கண்டார். அத்தகைய கனவு கூட டாட்ஜியோ மீது அவர் கொண்டிருந்த ஆலிங்கன மோகத்தால் ஏற்பட்டது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. அதற்குப் பின்னரும் வெளிப்படையாகஅவனைத்தொடர்ந்துநோக்கிக் கொண்டிருந்தார்.அத்தகையநிலையில்அவரது நடவடிக்கைகளை அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே கண்டு விட்டார்களோ என்ற அச்சமும் கொண்டார். அத்தகைய சுழலில், அவனை நெருக்கமாகக் காணும் கட்டத்தில் மிக ஜாக்கிரதையாகவே இருந்தார். அவனை தொட்டதோ, பேசியதோ இல்லை. அவரது உணர்ச்சிகள் பார்வைகளோடு அடங்கிக் கிடந்தது. தன்னை அழகுற காட்சிப்படுத்த தெரு முனையில் உள்ள நாவிதன் கடைக்கு தினமும் சென்று தனது முடிக்குச் சாயம்போட்டுக் கொள்வார். கான்டோலோவில் இளைஞன் போல் பாவித்த வயோதிகனை ஒத்ததாக அச்செயல் இருந்தது. வெனிஸில் வெப்பம் சுட்டெரித்த வேளையிலும் கூட டாட்ஜியோவின் பின்னால் அலைவதை அவர் விட வில்லை. வெனிஸ் நகரத்தின் மையப் பகுதியில் அவரது பார்வையிலிருந்த டாட்ஜியோ தொலைந்துபோனான். அவர் சோர்ந்துபோனார். தாகம் வறண்டிழுக்க, தாக சாந்திக்காக கனிந்து நைந்த ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கி உண்டார். சில நாட்கள் கழித்து, அஸ்ஹென்பெச் ஹோட்டலின் முகப்புக்கு செல்கிறார். அவரது உடல் நிலையில் சோர்வையும், நலமின்மையையும் உணர்ந்தார். அப்போது அங்கு அந்த போலந்துக் குடும்பத்தை கண்டார். மதிய உணவுக்குப் பின் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்துக் கொண்டார். அஸ்ஹென்பெச் அங்கியிருந்து கீழிறங்கி கடற்கரைக்கு செல்கிறார். அங்கு அவர் வழக்கமாக அமரும் மேஜை நாற்காலியில் அமர்கிறார். அங்கு டாட்ஜியோ தன்னை விட வயதில் சற்று மூத்த பையனுடன் இருக்கிறான். இரு சிறுவர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அதில் டாட்ஜியோவின் கை வலுப்பெறுகிறது. பிறகு கோபத்துடன் அவனிடமிருந்து விலகிச் செல்கிறான். அஸ்ஹென்பெச் நிற்கும் பகுதியின் ஊடாகச் செல்கிறான். அப்போது கடலை பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனைச் சற்று திரும்பிப் பார்த்தார். அஸ்ஹென்பெச்சை பொறுத்தவரையில் அவனிடமிருந்து சமிக்ஞைகள் இருந்தால் மட்டுமே பின் தொடரவும், மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் எண்ணிருந்தார். அந்த எண்ணத்தோடு நாற்காலியில் போய்ச்சாய்ந்தார். சில நிமிடங்களில் அஸ்ஹென்பெச் மூர்ச்சையாகிறார். அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரின் மரணம் பற்றிய செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.சிறப்புமிக்க கலைஞருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.தனது லட்சியம் நிறைவேறாமலேஅஸ்ஹென்பெச்அமரர் ஆனார்.
மரணத்தடம் குறுநாவல்,கிரேக்க புராணத்தின் அடிப்படையில் கட்டமைப்பட்டதாகும். அறிவு மற்றும் பகுத்தறிவுக்கான கடவுளான “அப்போலா(APOLLO),” போல் அஸ்ஹென்பெச் கதாபாத்திரத்தை தாமஸ் மன் படைத்திருந்தார். உணர்ச்சி மற்றும் பகுத்தறிவுக்கு உடன்படாது உணர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கடவுளான “டையானிசஸின்” சக்தியை அஸ்ஹென்பெச் மறுதலித்திருந்த பட்சத்தில், அவரை அழிப்பதற்காகவே டையானிசஸ் வெனிஸ் வரை பின் தொடர்கிறான். பல்வேறு தருணங்களில் அவரிடம் குறுக்கிடும் செந்நிற முடிக் கொண்ட நபர்கள் டையானிசஸின் சீடர்கள். கஸ்டவ் வோன்அஸ்ஹென்பெச் என்ற கதாப்பாத்திரத்தை தாமஸ் மன் ஜெர்மன் கவிஞரான “ஆகஸ்ட் வோன் பிளாட்டனின்,” உந்துதல் கொண்டு படைத்திருந்தார். அந்த கவிஞர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்ததாகும். அவரை உந்துதலாகக் கொண்டு தான் தாமஸ் மன், சிறுவன் மீது தீரா காதல் கொள்ளும் அஸ்ஹென்பெச் பாத்திரத்தைப் படைத்துள்ளார். அந்த பிதற்றல், பித்து மொழியாக எழுத்து வடிவம் பெற்று, சூழ்வெளி தவிப்பை எய்திக் கொண்டிருந்தது. கடற்கரை பிரதேசத்தில் அவன் திரிந்த இடமெல்லாம் அஸ்ஹென்பெச்சின் தடமும் ஆழப் பதிந்துக் கிடக்கிறது. அதித உணர்ச்சி பிரவாகத்துள் அவர் ஆட்படுகிறார். டாட்ஜியோ என்ற அந்த சிறுவன் அவருக்கு ஒரு விந்தையாவனாகவும், காதலின் பிம்பம் போலவும், ஏன் ஒரு கடவுளாகவும் காட்சித் தருகிறான். அவன் மீதுள்ள காதலிருந்து விடுபட எண்ணுகிறார். அவரால் முடியவில்லை. மரணம் சம்பவிக்கும் வரை அவரிடமிருந்து கொண்டிருந்த மோகம் விடுபட்டு போகவில்லை. தாமஸ் மன் 1911 ஆம் ஆண்டு விடுமுறையை கழிக்க வெனிஸ் சென்றிருந்த போது இந்த நாவலைப் பற்றிய கரு உருவானதாக அவரது மனைவி காட்டியா நினைவுப்படுத்தினார். இந்த நாவலானது சிறுவன் ஒருவனிடம் எழுத்தாளர் ஒருவர் கொண்டிருக்கும் உணர்ச்சி சற்றும் வக்கிரமாகாமல் தாமஸ் மன் வெளிப்படுத்திருக்கிறார். தாமஸ் மன்னின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக மரணத்தடம் நாவல் பதிவாகி உள்ளது. நாவலில் குறுக்கு வெட்டாக கிரேக்க புராண காதல் தெய்வங்கள் மற்றும் அவைகளின் சல்லாபங்கள் ஊடி வருவதும். நிறக் கூடுகள் கடலில் கலந்து, கரைந்து நேர் கோட்டற்ற களமாக நாவலில் பதிவாகி உள்ளது. பல்வேறு உலகளாவிய விருதுகளைப் பெற்ற தாமஸ் மன்னுக்கு 1929 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கபட்டது.

07.07.2008 க. செண்பகநாதன்

1 comment:

ரா.கிரிதரன் said...

நல்ல அறிமுகம். தாமஸ் மன் எழுதிய மற்ற புத்தகங்களின் தமிழாக்கம் வந்துள்ளதா எனத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நன்றி
ரா.கிரிதரன்