Thursday 18 June, 2009

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா - உபாலி

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா / © உபாலி / கவிதைகள் / முதல் பதிப்பு : நவம்பர் 2008 / அட்டை வடிவமைப்பு : தி. முரளி / வெளியீடு : கண்ணி பதிப்பகம், 17 B, தென் வெட்டுக்காரத் தெரு, தஞ்சாவூர்-613 001 /செல்: 9894931312

சுரோணித வனத்தை முன் வைத்து

“எனது பிடில் ஓய்வின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது,”
(மொசார்ட்)


எல்லையற்ற தானிய வயல்களில் தானியங்கள் பொறுக்கியவாறு ரூத்தின் சரித்திர தொடர்ச்சியாகவும், பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கும் புத்த நீட்சியாகவும் புத்தக அடுக்குகளின் எல்லையற்ற சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கின்றன. மொழியின் அமைப்பை ஏற்றுக் கொண்ட பின் அர்த்தம் மரணித்து விடுகிறது. நேர் கோடற்ற எழுத்தின் ஊடாக பயணிக்கும் பிரதி தேவதைகளின் வெளிகளுக்குள் நவம் கொள்கிறது. சுரோணித வனத்தில், சிதைந்த தாராசுரம் கல்வெட்டுகளில் அமிழ்ந்துகிடக்கும் கல்தச்சன் கடை ஆயுதத்திலிருந்து செதுக்குளி சப்தம் இன்னும் அகண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காற்றுவெளியில் அதுவே இன்னும் இன்னிசையாகவும் கமழ்ந்துக்கொண்டிருக்கிறது. சமணர்களையும் பௌத்தர்களையும் கொன்று குவித்த அதே கௌடில்யர்களின் கோர நகங்களின் அகோர பசி இன்றும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சீவக சிந்தாமணியில் நெற் கதிர்களை தங்களது பிறையுயிர் கண்ணிமைகள் கொண்டு அறுக்கும் பெண்டிர்களின் அறுவடை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரமிளின் எல்லையற்ற சிறகுகள் எழுதப்படாத பக்கங்களில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் கூற வந்தவைகளுக்கு மொழியின் போதாமை இருக்கும்பட்சத்தில் வேறு வழிகளை காண வேண்டியுள்ளது. அத்தகையது உருவகமாகவோ, சங்கேதமாகவோ அல்லது குறியீடாகவோ இருக்கலாம். இசை மற்றும் சிற்பம் போன்றது தான் அது என்கிறார் போர்ஹே. லீனியரின் தோற்ற உருக்கள் சிதையுற்று நேர்கோடற்று விரியும்போது வெளியும் எல்லை யற்றதாகிறது.
ஆதி மனிதன் முதலில் பேசத் தூண்ட, உணர்ச்சியே பிரதான மாக இருந்தது. அப்போது அவன் தனது வெளிப்பாடுகளை உருவங்களில் வழியே வெளிக்காட்டினான். இதுவே மொழியின் ஜனனம். வடிவ மொழி முதலில் தோன்ற, அதன் பின்னரே அர்த்தம் பரிணமித்தது. அத்தகைய சூழல் அந்தந்த பொருட்களின் உண்மை சொரூபகங்கள் கொண்டே உணரப்பட்டதாகும். முதலில் ஜனனம் பெற்று, பேசப்பட்ட கவிதை நீண்ட காலம் வரை வாத ஆதாரமின்றியே புழக்கத்தில் இருந்தது.
உரத்து பேசுவதோ அல்லது புலம்புதோ அல்லது சுவிஷேச புத்தகத்தினை போல் உருகி, உருகி பிரார்த்திப்பதும். உருகி காதல் செய்வதும் கவிதையல்ல. இப்படியாக ஒரு சாராரும் மற்றும் சிலர் தத்துவ கூச்சலும், நியூஸ் பேப்பர் வாசிப்பு தன்மைகொண்ட எழுத்துகளுமாக பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
“புரிதல்” என்ற ஒற்றைத் தன்மையை சுற்றியே கவிதைகள் எழுதப்படும் பட்சத்தில், அத்தகையது பாசிசத்திற்காக வழி கோலல். புரிதல் என்பது மிக பயங்கரமான வாதம். நுண்மைக்கு எதிரானது. அத்தகையது தான் பாசிசம். நவீனத்துவ சிந்தனைப் போக்கை மறுதலித்தும், காலவதியாகியும் உள்ள சூழலில், அதனை தொடர்ந்து வழிமொழிந்தவாறு இயங்குவது உகந்ததல்ல.
“எது மௌனமாக இருக்கிறதோ அது பேச வைக்கப்படுகிறது. அப்படி பேசவைப்பதே மொழி. ஆக மொழியின் உள்ளுமை (Being), ஆளுமை பேச வைக்கப்படுகிறது. அப்படிப் பேசுகிற பொருளே கவிதை,” என்கிறார் நாகார்ஜூனன். மனிதனின் வளர்ச்சிக்கேற்பவும், தேவைக்கேற்பவும் மொழி பெரிதும் மாறுப்படுகிறது, அதனை வளைத்தெடுக்கவும், உடைக்கவும் அமைப்பியல் மற்றும் உத்தர-அமைப்பியல் கோட்பாடுகள் வழி காண்கின்றன. அதற்கான அவசியமும் உள்ளது. பூக்கோவின் உளபகுப்பாய்வுக் குறித்த கருத்துடன் ழாக் டெரிடாவும் ஒத்துப் போகிறார். பித்த மொழி குறித்தும், அதையடுத்து வெளிப்படும் குழந்தையையத்த(child like innocence) மனநிலையே இலக்கியத்திற்கான இடம் ஏன்கிறார் டெரிடா.
உலகத்தைப் பற்றிய கதையாடல் என்பது எல்லையற்றது என கூறுகிறார் பார்த். நேர் கோடற்ற எழுத்து என்பது பன்முகம் கொண்டது, அத்தகைய நிலையில் ஒற்றை பரிணாம பொருள் (meaning) என்ற போக்கு முற்றிலும் அபத்தமாகிறது. அதனால் படைப்பாளி வழக்கமான கட்டமைப்பிலிருந்து மீற வேண்டிய கடப்பாடு அவசியமாகிறது.
சுரோணித வனத்தில், பைபிள் பிரதிகள் ஊடிச் செல்லும் போது, அந்தந்த பிரதிகளின் ஊடாகவே பெரும் கதையாடல்கள் தகர்வுக்கு உள்ளாகின. கெயின், ஏபல், ரூத், ஆதாம், ஏவால் உட்பட பைபிள் பிரதிகள் தங்களது நிலைகளிலிருந்து பிறழ்கின்றன.
குழந்தையிடம் ஒரு வித மாயை தன்மை ஊடாடுவதும், அத்தகைய புராணிகத்தன்மை கவிஞர்களோடு நெருக்கமான தொடர்பை உடையது. அவர்கள் கொண்டிருக்கும் மாயை தான் படைப்புத் திறன் கொண்டது. அத்தகைய புனைவு கட்டற்ற பாய்ச்சல். அந்த கட்டற்ற தன்மையே நேர் கோட்டுடனான தொடர்பை வெட்டக்(disjunction)கூடியது. ஏனென்றால் குழந்தைகளின் புராணிகம், பெற்றோர்கள் கொண்டிருக்கும் சமயவாத கூட்டு நம்பிக்கைக்கு நேர் எதிரானது.
உருவகம்(metaphor) என்பது குறி(sign) மற்றும் குறிப்பீடு(signified)‚க் க்கும் இடையே உள்ள தொடர்பை கொண்டது. அத்தகைய இணைப்பு என்பது அந்த பொருளுக்கும், அதன் மீதான செயல்பாடு குறிந்த கருத்துக்கும் அடிப்படையிலேயே அமைந்ததாகும். உருவகத்தை புரிந்துக் கொள்ளுதல் என்பது குறியீட்டாரின் செயல்பாட்டில் உள்ள வெளிப்பாட்டுடன் உள்ள அர்த்தம் மற்றும் கருத்துருவம் கொண்டே உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
“கவிதைமொழியின் தர்க்கம், பொதுவாகப் புழங்கும் பேச்சின் தர்க்கத்திலிருந்து மாறுபடுகிறது. நவீன கவிதையில் பேச்சையே கவிஞன் கையாண்ட போதிலும் வரிசைப்பாடான அடுத்தடுத்து நிகழ்வும் பேச்சின் தர்க்கம் கைவிடப்படுகிறது. .. சாரமற்ற செய்தித் தாள்களின் உரைநடை, வியாபாரக் கடிதங்களின் மொழி, அரசாங்க அலுவலக ஆவணங்களின் சவத்தன்மையான உரைநடை போன்றவற்றிலிருந்து கவிதையின் மொழி,(அதன்) உயிர்ததும்பும் இயக்கத்தின் காரணமாக, வேறுபடுகிறது. குழந்தைப் பருவத்தில் நம்மால் ஸ்வீகரிக்கப்பட்ட, நமக்குத் தரபட்ட மொழி, சிந்தனை சக்தியற்றதாக இருக்கிறது.... எனவே சூட்சும மொழிகள் பிறகின்றன. அவற்றில் இங்கு நம் கவனத்துக்கு முக்கியமான இலக்கிய மொழியானது, தனித்து இயங்குவதோ வெற்றிடத்திருந்து பெறப்படுவதோ அல்ல. பேச்சு மொழியிலிருந்தே பெறப்படுகிறது.
புரியாத்தன்மை என்பது பிரதானமாய் கவிஞனிடத்தில் இல்லை. மாறாக வாசகர்களாகிய நம்மிடம் தான் உள்ளது. மேலோட்டமாகவும் துல்லியம் இழந்த வகையிலும் நமது
தெளிவும் தர்க்கமும் இருக்கின்றன.....” என பிரம்மராஜன் கூறுகிறார்.
“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்று மவ் வியோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண்சாணது வாகுமே”
(திருமந்திரம்:448)
Within the chain of supplements, it is difficult to separate writing from onanism (of Grammatology) எழுத்தின் தொடர்இணைவு போக்கு குறித்து டெரிடா குறிப்பிடும் போது பாலியல் உறுப்புகளுடன் கூடிய இன்ப நிலையோடு குறிப்பிடுகிறார். இதனை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், சுரோணித வனம் குறித்து எழுந்த விமர்சனமே, வாசிப்பவர்கள் இதனை கொண்டு கவிதையை அணுகுவதே நல்லது.

7. 11. 2008 உபாலி(க. செண்பகநாதன்)

No comments: