
தொலைந்துபோன
பச்சைவண்ண சட்டை
நிலாச் சிதேகம் போல்
நித்திரையிலும் அகலாத
எனது கரும் பச்சை
வண்ண சட்டை.
மறக்க முயன்றும்
முடியாமல் இன்று வரை.
அழுக்கைத் தொலைக்க
சலவைக்குப் போன
சட்டையும் சேர்ந்து
தொலைந்து போனது.
நினைவுச் சீப்பு
மனதெங்கிலும்
சீவி கீறிற்று.
நீரூற்று கிணத்திலோ அல்லது
சலமற்ற குளத்திலோ தான்
அதை அவன்
தொலைத்திருக்க வேண்டும்.
பாலியத்தின் முகச்சாயலுடன்
தொலைந்த அந்த
பச்சை வண்ணச் சட்டையின்
துளிர்மேனியெங்கும்
சக்கர வடிவம் மின்னும்.
அதுவும் என் சாயலுடன்.
என் நச்சரிப்பை பொருக்காத
அம்மாவோ வண்ணான்
இறந்து விட்டதாய் கூறினாள்.
என் நினைவுகள் மட்டும்
மடிந்து போய் விட வில்லை.
ஒவ்வொரு சவ ஊர்வலத்தின் போதும்
அந்த சட்டை நியாபகத்திற்கு வரும்.
என் இரண்டு வயது
கருப்பு வெள்ளை
நிழல் படத்தில்
அந்த சட்டையை,
அதன் நிறத்திலேயே கண்டேன்.
அந்த அடர் பச்சை வண்ண சட்டையை
மட்டும் நான் கண்டதில்லை
என்றபோதிலும்
கருப்பையில் அணிந்த சட்டை
என்று ஒன்றுள்ளது.
1 comment:
//என் நச்சரிப்பை பொருக்காத
அம்மாவோ வண்ணான்
இறந்து விட்டதாய் கூறினாள்.
என் நினைவுகள் மட்டும்
மடிந்து போய் விட வில்லை.
ஒவ்வொரு சவ ஊர்வலத்தின் போதும்
அந்த சட்டை நியாபகத்திற்கு வரும்.//
A beautiful and realistic poem.
Post a Comment