Wednesday, 21 July 2010

மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


அனுப்புநர்: கலைஞர் தாசன்.
தமிழ் இல்லம்
தமிழ் தெரு,
தமிழுர்.
தமிழ்நாடு. அஇஈஉஊஏ
பெறுநர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள்
தமிழ் நெஞ்சம்,
தமிழ் கோட்டை
தமிழ்நாடு.அஇஈஉஊஎ.

பொருள்: ஐயா! என்னை தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக

ஐயா!
சூன் மாதம் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டுக்கு வருகைத் தராதவர்கள் தமிழரல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்னை புறநகர் பேருந்து நிலையம் வந்த வேளையில் இயற்கை கூட தமிழுக்கு எதிரியாக ஆகி போனது. எனக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டதால் பேருந்து நிலைய கழிப்பறையில் முன்று நான்கு மணி நேரம் கழிக்க நேரிட்டது. பிறகு தவழ்ந்தவாறே இரவு முழுவதும் பயணித்து வீடு வந்து சேர்தேன். வரத் தவறிய அல்லது வர மறுத்த மற்றவர்களை போல் என்னையும் எண்ணி விடாதீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ்நாட்டை விட்டு வேறெங்கும் வாழவும் வக்கற்றவன். ஆகையால் மாநாட்டிற்கு வர இயலாததற்கு உடன் நலம் சரியில்லை என்பதைத் தவிற வேறு காரணம் ஏதுமில்லை. ஆகையால் ஐயா, என்னை மன்னித்து, மாநாட்டுக்கு வந்த மற்ற தமிழரைப் போல் என்னையும் ஒரு தமிழர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உண்மைத் தமிழன்
கலைஞர் தாசன்

(ஐயா! இந்த வேண்டுதல் கடித்ததுடன் தமிழுக்கு எதிரான சக்திகளைப் பற்றியும், உங்களது அரும் பெருமை பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை இணைத்துள்ளேன்)
ஐயா! உங்களது ஆற்றலை அறியாத பேதைகளுக்கு நான் உரைப்பது என்னவென்றால், அவர்கள் பேதைகள் என்பதை விட வேறு என்ன கூற முடியும். தமிழரல்லாத அந்த தமிழ் விரோதிகள் இருந்து என்ன பயன். இந்த தமிழர் அல்லாத பீடைகள் உலகமெங்கும் விரவி கிடக்கிறார்கள். உங்களை வாழ்த்தாத தமிழர் அல்லாத தமிழ் விரோத நாட்டு தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தமிழர் என்ற சந்தேகத்திற்குரிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன தலைவர் ஊ சின்டோ, பிரஞ்சு, இங்கிலாந்து மற்றும் ஏனைய அனைத்து தமிழர் என்று சந்தேகத்திற்குரிய நாட்டு தலைவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.


கி.மு 50000- வது நூற்றாண்டு முன் வாழ்ந்த தமிழ் புலவனின் வழித் தோன்றலான இக்காலக் கவிஞர் உரைத்தது போல் நீர் தான் தமிழ். எந்நாளும் நீ தான் தமிழ் மாமன்னன்.
“தமிழா! தமிழா! நாளை உன் நாளே
தமிழா! தமிழா! நாளும் உன் நாளே!”
என்று பாடிய மகா கவிஞர் தமிழின் உச்சம். உங்களின் மிச்சம். இதைப் போல் உங்களை புகழாத சொச்சம் வெறும் எச்சம். மாநாட்டுக்கு வந்திருந்த உண்மை தமிழர்கள் தமிழே ஆன உங்களை புகழ் பாடினர். அதை கண்டு இங்கு வாழும் ஈனர்களுக்கோ ஆத்திரம். “அனைத்து சாலைகளும் கோவையை நோக்கியே,” என்ற நிலையில் மாநாட்டுக்கு வராமல் இருந்தவர்களை மதுரையில் இன்னும் உள்ள ஆதி கழுமரத்தில் ஏற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இப்படி என்றால், இலங்கையில் வாழ்பவர்களை என்னவென்று கூறுவது. தமிழ் நெஞ்சம் சிவதம்பி தவிற, முள்வேலியில் வசந்த வாழ்வு கொண்டிருக்கும் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் வரவில்லை. உங்களது மாநாட்டு வர வக்கற்று இறுதிகட்ட போரில் மடிந்து போன தமிழர் அல்லத மற்றும் தமிழரா? என்று சந்தேகத்திற்குரியவர்களையும் நான் கண்டிக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், அயராது தமிழுக்காகவே உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு.
ஆகையால் தலைவரே! மாநாட்டுக்கு வந்திருந்த 10 லட்சம்(சுமார்) பேர்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழரே என்பது எனது திண்ணம். குறிப்பாக மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் தமிழ் இந்திய நிதியமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன்(இவர்கள் பெயர்கள் குறித்து கி.மு.45002-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செக்கோசுலோவிக்கியா தமிழர் என்று சந்தேகமற்ற அறிஞரும், 45001-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் என்று சந்தேகமற்ற உகாண்ட தமிழ் அறிஞரும் அவர்களது பெயர்கள் குறிந்து சந்தேகத்தினால் அந்த சர்ச்சை வேண்டாம் என்று இருவரின் பெயர்களையும் நான் குறிப்பிட வில்லை) .
உலக தமிழர்களின் மக்கள் தொகை
(தமிழர் என்று சந்தேகத்திற்கு உட்படாமல் ): 6,856,600,000 (சுமார்)
தமிழ்நாட்டின் உள்ள தமிழர்களின்
மக்கள் தொகை
(தமிழர்கள் என்று சந்தேகத்திற்கு உட்பட்டு) 66,396,000(சுமார்)
மாநாட்டில் பங்கு கொண்ட
உண்மை தமிழர்கள் 1,000,000(சுமார்)+1
கடுமையான உடல் நிலை பாதிப்பினால்
மாநாட்டிற்கு வரத் தவரிய தமிழர்
(உங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) 1

ஆக மொத்தம் உலகில் உள்ள சந்தேகத்திற்கு
இடமின்றி தமிழர்கள் : 1,000,001(சந்தேகத்திற்கு
இடமின்றி நிதர்சனம்)

தலைவா நான் மாநாட்டுக்கு வர இயலவில்லை என்றாலும் உம்மை பற்றி நான் புகழுறை அளிக்காவிட்டால் எனது பிறவிக் கடன் தீராது.
தலைவா! இந்த கவிமழை:
இதோ புடிச்சிக்கோ:
தமிழ் மன்னவா
நீ சாணக்கியனான தமிழன்
தமிழின் கனி
மொழியில் செம்மொழி

தலைவா நீ
தேசத்தை பாதுகாத்த
தேச பாதுகாப்பு சட்டம்.

தலைவா நீ
சீனர்களுக்கு மாவோஸ்ட்
சிகரத்தில் எவரஸ்ட்
போயஸ் கார்டனுக்கு நீ டேரர்ரிஸ்ட்,

தலைவா நீ
மகா கவி
உனக்கு அளிக்கப்படாத
நோபல் பரிசு,
இனி நோபல் பரிசு
எவருக்கும் அளிக்காது
நோ பீஸ்(அமைதி).

இலங்கையில் புலியாம்
இங்கே பகையாளியாம்
நம் பெண் சிங்கம்
சோனியா இருக்கையில்
ஏன் பீதியாம்?

உலகில் ராஜாவாம் உயரியம்
2-ஜி ஸ்பெட்ரம்
இனி தமிழன் தான்
முதல் தரம்.

தலைவா நீ, தமிழ் அங்காடி
உனக்கு போட்டியா
ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி.

தலைவா! இன்னும் நிறைய எழுத என் நெஞ்சம் கொள்ள கொள்கிறது. எனினும் கவிஞர் வாலி அவர்கள் இதை விட அழகாக இன்னும் புகழ் பாடுவார் என்பதால் இந்த பொடியன் விழகிக் கொள்கிறேன்.
உலகில் உள்ள 600 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின்(சந்தேகத்திற்கு இடமின்றி, கி.மு. 70000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எகிப்திய அரசரும் தமிழர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத ஆராய்ச்சி குறிப்பிடுவதால்) ஒரே தலைவன் நீர் தான். உமது பெருமை குறித்து நமக்கு புதிதாக கிடைத்த செப்பு பட்டையத்தை ஆய்தல் வேண்டும். இந்த மாநாட்டிற்கு எதிராக தமிழரல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் இலங்கையில் தமிழர் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்களாம். நான் கேட்கிறேன்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. என்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மணமேடையில் இருந்து புறப்பட்டு வந்தார்களா?. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார்களா? அல்லது, பாளையம் கோட்டை சிறையில் பாம்புகள் மத்தியில் சிறைப்பட்டிருக்கிறார்கள், அல்லது உங்களுக்கு மாமானா, மச்சானா அவர்கள், மானங்கெட்டவர்கள். இப்படி எதும் செய்யாதவர்களை எப்படி தமிழர்கள் என்று ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தி.மு.க. வுக்கு ஓட்டாவது அளித்திருக்கிறார்களா? அல்லது கடந்த ஆட்சியல் ஒரு நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது அதிர்ச்சியில் இறந்து போன பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலராவது இவர்களா? ஆகையால் இவர்கள் தமிழர் ரத்தம் இல்லை என்பது புலனாகிறது. இப்படியான நிலையில் உங்களது புகழை கண்டே இவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள்.
அதே போல் செம்மொழியாக நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றதற்கு ஏதோ தமிழ் மொழியின் சிறப்பு என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் செம்மொழி குறித்து வேறு பல அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு முன்னரே கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்கள். அவர்களை யார் தமிழ் செம்மொழி ஆவதற்கு முன்னரே கோரிக்கை விடுக்கச் சொன்னது. ஐயா, நீங்கள் தான் தமிழ். அது எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ் சிறப்பனாது என்று கருத்து தெரிவிக்க முடியும். ஆகையால் அவர்களும் சந்தேகத்திற்கு உரிய தமிழர்களே!
அதே போல் மாநாட்டுக்கு வந்த தமிழர்கள் மிகுதியாக மது அருந்தியதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் விற்கப்பபடும் மதுவை தமிழர் அருந்தாமல் வேறு யாரை அருந்த அனுமதிக்க முடியும். அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் தராமல் தடுக்கையில் நாம் ஏன் மற்ற மாநிலத்தார்களுக்கு மது கொடுக்க வேண்டும். ஆகையால் தமிழரே அருந்த வேண்டும். அதே போல் மாநாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான தமிழ் குடிகள், திராவிட குடிகள் என்பதை வலிமையுடன் கூறி கொள்ள கடமை பெற்றுள்ளேன்.
அதே போல் தாங்கள் எழுதிய மாநாட்டு பாடலை சிலர் குறை கூறுகிறார்கள். நீங்கள் இப்படலை எழுதியதற்காக, கவிப்பேரசர் வைரமுத்துவைப் போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையா கோரவாப் போகிறீர்கள்? அல்லது விற்பனை உரிமையாத்தான் கோரப்போகிறீர்கள்? இலவசமா செய்தது தானே. தமிழனுக்காக வீட்டை தந்தீர்கள், உங்கள் மக்களை தந்தீர்கள், உங்கள் ஆற்றலை தந்தீர்கள், உங்கள் தமிழை தந்தீர்கள், அதே போல் தான் பாடலையும் தந்தீர்கள். தமிழ் இந்திய குடியரசுத் தலைவி பொருள் உணர்ந்து அப்படலை புகழ்ந்தாரே, அதுக் கூடவா இவர்களுக்கு புரியவில்லை.
தஞ்சையில் நடந்த கடந்த தமிழ் மாநாட்டின் போது “ தமிழ் இங்கிருக்க அங்கே ஏன் வீணாக மாநாடு,” என்று அன்று குமுறிய உலக மகா கவிஞர் அப்துல் ரகுமான். இன்று தமிழுக்காக இப்படியான மாநாட்டில் தனது பிறவிப்பயனை அடைந்து விட்டார். உலகத் தமிழர்களின் தலைவர் நீங்கள் என்கிறார் சிவத்தம்பி. நாளை ராஜ பக்ஷே அழைத்தால் கூட அந்த பட்டத்தை திருப்பி போட்டு விடுவார். இப்படியாக தமிழாக விழங்கும் ஐயா! கலைஞர் அவர்களே! உங்கள் ஆற்றலை பல்லாயிரம் பக்கங்கள் நீட்டிக் கொண்டே போகலாம். இருப்பினும் இதை மறுக்கும் ஈனர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மனம் நொந்து போகிறது.
தலைவரே! இப்படியாக நான் கூறுவதன் மூலம் தமிழர் அல்லாத கொசுக்கள் கடிக்கக்கூடும், தமிழர் அல்லாத ஈக்கள் மொய்க்கக்கூடம், தமிழரல்லாத ரவுடிகள் எனது வாயிலேயே குத்தக்கூடும், இருப்பினும் உங்களது கொடையின் கீழ் வாழும் சாதாரண தமிழன்(அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) என்பதலும், உங்களது பாதுகாப்பு இருப்பதாலும் நான் தைரியமாக இதை எழுதுகிறேன்.