Friday, 10 July 2009

விழித்த கணங்களில்


விழித்த கணங்களில்


பாறை இடுக்களில்
கசிந்ததொரு மனம்

கண்கள் திறக்க
மேல் எழுந்தன
இமைகள்
.
நீர் பெருக
நிறைந்தது கடல்

பாறை அகல
விழித்தது கூழாங்கல்

விழிகள் கசிய
உச்சாணி எழுந்தது.

மீட்டிட்ட கடல் நடுவே
நிலவொன்று
முளைக்க
காத்திருந்தது சாகர நிழல்.


கடற்கரை வெளியெங்கும் பதிக்க,

கால்கள் இரவு முழுவதும் அலைந்தன.

இருள் பதித்துப் போன
சுவடுகளை
பகல் முழுவதும்
தேடிய பின்னர்

நிழல் கேட்டது
யாருடையது? என.

அவன் கூறினான்,
“என்
நேசத்துக்குரியவளுக்கு உரியது,
நேற்றிரவு விட்டுச் சென்றாள்” என்றான்,

உறங்கிற்ற இரவில்
விழித்தது
எனது சுக்கிலம் என்றான்.
கண்கள் திறக்க
பாறை கேட்டது

“யாருடையது” என்று

“என்னுடையது,” என்றான்

பாறை நகைத்திட்டது.

வெப்பத்தில் பாறையில்

ஈரம் காய்ந்திற்று.

Saturday, 4 July 2009

உலக பொருளாதார வீழ்ச்சி


உலக பொருளாதார வீழ்ச்சி (1)
-க . செண்பகநாதன் -
இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(Laissez faire) மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது.

- தொடரும் -

நிழலோடிய சுவடு


பதித்த வழிகளில் உன்னுடைய
கால்கள் அல்ல.

உருமாற்றமும் ஒருவித
தப்பித்தல்
தான்.
உன்னில் இருந்து என்னையும்

என்னில் இருந்து உன்னையும்

நிழலோடிய சுவடு அது.

Friday, 3 July 2009

நகர பூங்கா


நகர வீதியில்
வரையறுக்கப்பட்ட பூங்கா.

எண்ணிக்கைக்கு அடங்கிய
செடிகள்.

உலர்ந்த பூக்கள்.

அந்தி வந்தது.

கதவு திறக்கப்பட்டன.

கூட்டம் கூடியது.

சிலர் நடைபயிற்சி செய்தனர்.

சிலர் கூடி குலாவினர்.

விரசங்கள் சில விரவினர்.

ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர்.

எட்டு மணியாகி விட்டதென

விரட்டினான் காவலாளி.

அவரவர் தொடைத்து
கொண்டு
புறப்பட்டனர்.

பூட்டப்பட்டது கதவு.

காலம் வரையறைக்கு உட்பட்டது.

Thursday, 2 July 2009

காதல் கடிதம்


காதல் கடிதம்


காலத்தை அளவிடுத்தன நாட்குறிப்புகள்
அதனோடு என் வயதையும்
கணக்கெடுக்க நான்

தவறி விட்டேன்.

ஒரு நாள் தேவாலயத்தில்
இறைவனிடம்
வேண்டி
நான் நின்ற போது

ஒரு கணம் உன்னை
காண நேர்ந்தது.

எனக்காக நீ உதிர்த்தாற் போல்

அக்கணமே நான் உணர்ந்தேன்.

உனக்காகவே நான் பிறந்தாற் போல்-

என்னுள் ஒரு நினைப்பு.


காற்றி
ன் திசையெங்கும்
விண்ணுலக
தேவதைப்
போல் தாவிப்பறந்தேன்.

அக்கனம் முதல் என் உள்ளத்தில்

நட்சத்திரம் முளைத்தது போல்

மய்யல் கொண்டேன்.
காலச்சக்கரம் சுழன்று
என் முன்னே
வந்து நின்றது போல்
ஒரு நினைப்பு.


கடல் கலைக்கும் அலைப்போல்

என் மனமெங்கும் அலை வீச
காற்றில் அசைந்தன

கானகமே.

வெண்ணிறம் படர்ந்த
பனி வெய்த வீடு

காலைப்பொழுதின் தீர்க்கத்தை
உணர்ந்தேன் நான்,

அத்தகைய நாள் ஒன்றில்

மறை திறந்த பரிதியைப்போல்

உன் வீட்டாரும்
எனை
கேட்டு வந்தனர்.

அன்றைக்கே உனை காண
நான் துடித்தேன்.

வண்ண வண்ண கனவுகள் கூடி

என் கண்களில் நிறைந்தன.

நிலத்தின் நீர்க்குமிழிகளோ

என் நெஞ்சத்தில் ஊற்றெடுக்க,

உன் முகம் நான்
அறிந்திருக்க வில்லை
என்றாலும்
ஒரு கணமேதும் நான்
யோசிக்க வில்லை
உடன் சம்மதித்தேன்.

உள்ளங்கள் கரைந்தோட
ஒருமித்தோம்.
கடற்கரையெங்கும்
நம் காலடிகள்
அலைகளோடு
கலந்தோடினோம்.

கண் விழித்த போது

கனவென்று உணர்ந்தேன்.

அக்கனமே உயிர் துடித்தது

கண்கள் கலங்கின.

உன் நினைவுகளோடு
கரைந்தன
ஈரைந்து வருடங்கள்
.

என் வீட்டு நாட்காட்டியுடன்

நானும் கரைந்தேன்,
கலைந்தேன்.

தோட்டத்தில் பூத்திடும் மலர்கள்

மாலைகள் ஆவது எத்தகைய
இயல்போ
அதுப்போல
நீயும் நானும் கலந்திடும்
நாளும் குறித்திட ஆயிற்று.
பூக்களும் மலர்ந்தன

வேளை வந்நது

இடையில் நாகமென்ற
நட்சு
என்னை பற்றிய
உமிழ
நீயோ
மலர் அவழ்த்த காம்புப் போல்
என்னை
விடுத்தாய்.
புயலில் ஆட்கொண்ட படகுப் போல்

நான் திக்கற்று போனேன்.

கருமேக கலைய
அழுதிடும்
விம்மிடும்.
அதனோடு நானும் அழுது
கரைத்துகொண்டேன்.

நீ என்னை மறுத்திடாய்

முகம் பார்க்க வெறுத்திட்டாய்

என் உள்ளம் உனக்கானது

என்பதை மட்டும் ஏன்

நீ மறந்திட்டாய்?

ஒருமுறையேனும் என்
முகத்தை
பார்த்திட
உனக்கேன்
தோன்ற வில்லை.
உனக்கான விழி
உன்
முகத்திடன் உள்ளது

என்பதை நீ ஏன்

அறிந்திருக்க வில்லை.

உனக்கான இதயம்

உனக்காக வேறொரு இடத்தில்

ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உணராமல் இருந்தாய்?

உனக்கான சுவாசம்

உனக்காக மட்டும்

சுவாசித்து கொண்டிருக்கிறது

என்பதை ஏன் மறந்திட்டாய்?


என் அன்பே!
எனை மறுத்திடும் நீ

ஒரு முறையேனும்

என் முகத்தின் நேரே வந்து

சொல்லி மறுத்து விடு.
உன் திரு வாயினோடு
உன் முகம் கண்டு

நான் ஏற்று கொள்கிறேன்.




(நான் எழுதிகொண்டிருக்கும் நாவலின் முக்கிய பெண் பாத்திரம் எழுதும் காதல் கடிதம். இதை வாசிப்பவர்கள் அவசியம் தங்களது எதிர்வினையை தெரிவிக்கவும்)

Wednesday, 1 July 2009

முதலாளித்துவம்


நட்சத்திரங்களை விலைக்கு வாங்க
எத்தனித்தான் வணிகன் ஒருவன்.

அவனுக்கு முன் வாங்கி விட்டதாய்

மற்றொருவன் கூறினான்.

“அதற்கென்ன நீ வாங்கியது

பகல் பொழுது நட்சத்திரங்களை,”
என்றான் இரண்டாவதாக வந்தவன்.
“அப்படியென்றால் பகலில் வீசும்

ஒளிக்கு விலை பேசப் போகிறேன்,”

என்றான் முன்றாவதாக வந்த வணிகன்,

அதற்கென்ன இரவை முதலீடாக்கி

விபச்சாரம் செய்ய போகிறேன்
என்றான்
நான்காவது வியாபாரி.
“வாழ்க முதலீடு,

வளர்க செல்வம்

உலக முதலாளிகளே

ஒன்று கூடுங்கள்”

Tuesday, 30 June 2009

முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா


தீயின் வனப்படுப்பை உடல் ஏற்றியிருக்க
கானகம் மறுத்த இலைகளே சருகுகள்

இலை முதிர்ந்த வனம் கோட்டின்
விதிகளால் பழுப்பேறுகின்றன.
முதிர் காக்கையின் கண்களில் ஊடிச்
செல்லும் ஒரு வனத்தின் காகிதம் கூடவே.

புழக்கத்தில் இல்லாத முகம் அதில் வரும்.

மேய்ச்சலில் தளர்ந்த அந்தி வர்ணமோ

புகழிடச் சிகையென பூக்கள் உதிர்க்கும்.

அதுபோல் தான் அன்று இறகுத் தாத்தா

வந்ததும்.


வந்ததும் முற்றத்து வீட்டு ஆளோடியில்

அடைந்து கொள்வார்.

நாழி ஓடுகள் வெய்யப்பட்ட விதானம்,

வீட்டில் எஞ்சிய வெற்றுவெளி

ஆகாயமாய் திரளும் யுவப்பருவம்.

வீதிகளில் அவர் உலாவித் திரிய,

தெரு முகட்டில் வந்து நின்று பவ்வியமாக

நோக்கும் அண்ணம்மாள்.

உடல் முழுவதும் பூக்கள் முளைக்க

வனாந்திர நங்கையின் உதிரம்

நனைத்தெடுத்த பை.


ஒரு புள்ளியிலிருந்து விரியும் பூவைப் போல்

துகல் மகரந்த செயற்கையில்

பரந்து விரிந்த நிலக்கூட்டின்

மனிதச் சிராய்கள்.

மறைந்து திரியும் வெண் சுவடுகளை

அழுக்காய் பதிக்கும் முகில்களை

கழுவியெடுக்கும் மென் தூறல் உருவாய்

அவள் இருந்தாள்.


தாத்தாவின் தலை முடி அடர்ந்து,

சித்திரை மாதத்தில் பூக்கும்

இளவம்பஞ்சுப் போலானது.

தலைக்கு மேல் மேகத்தை அவர்

சுமக்க ஆரம்பித்ததும் தான் உணர்ந்தார்

தனது முதுமையை.

முதுமையில் தீர்க்கம் வெண்ணிறத்தால்

மெய்மை வெளிப்படவே செய்தது.

ஆனாலும் தனது முதுமையை ஏற்க

அவருக்கோ மனம் கொள்ளவில்லை.


அவரது சிரசத்தில் மயிர்கள்

வெண்ணிறம் எய்தியிருந்தாலும்

அடர்த்திக்கொண்டிருந்தது
.
தாத்தாவின் பதிவிரதைக்கோ

கண்களை உருட்டி மிரட்டும்

அவரது விழிகளுக்கு அஞ்சி ஒடுங்குவாள்.

அறையின் ஓரத்தில் நைந்துப் போன

மிருதங்கம் அவளைப் போலவே கிடந்தது.


உழுத்துபோன முற்றத்து விட்டத்தின் மீது

இறகுத் தாத்தா போய் அமர்ந்தார்.

காட்டின் இறகான அந்த விட்டம்

மெல்ல அசையத் தொடங்கியது.
இறகுத் தாத்தாவைக் காட்டிலும்

கனத்த இறகாய் அந்த
விட்டம் இருந்தது.

அந்த விட்டத்தில் இருந்த குயிலைக்

காட்டிலும் அந்த விட்டம்

அதிகமாக சிறகடித்தது.


விட்டத்தின் மேலிருந்த நாழி

ஓடுகளின் பிறழ்வு.

விதானம் கலைந்து
வானத்தின் கண்ணாடிகளாகின.

விட்டத்தின் ஓரமாய் இருந்த

பலகையில் மண் பானை அடுக்கு,

முன்னொரு காலத்தில் அவர்

பயணம் மேற் கொண்டிருந்த

தூரப்பிரதேசத்தில் இறகுகள்

முளைத்த மனிதர்களின் இறகுகளை

சேகரித்து அதில் வைத்திருந்தார்.


தூர தேசத்திலிருந்து பறந்து வந்த

அந்த இறகுகள் தாள்களாக

அதனுள் வேடமிட்டிருந்தன.

விடியல் புலர்ந்த வேளை

தாத்தாவின் பதிவிரதை

எழுந்து பார்த்த போது

தாத்தாவைக் காணவில்லை.


நீண்ட நேரம் ஆகியும் தாத்தா

வீடு திரும்பவில்லை.
நாட்கள் கடந்தன.

தடமற்ற வழிகளின் ஊடாக சுருதியற்ற

தனது கண்களால்
தேடத் தொடங்கினாள்.

பாதங்கள் வழி நடந்தவளை

மீத தூரமும் அழைத்தது.


நீலம் பரவிக் கிடந்த வான்வெளியில்

சிற் சில மேகத்துளிகள்
உருண்டோடிக்
கொண்டிருந்தன.
திசைகளற்ற பயணவெளிக்குள்

மேகத்தினூடாக தொடர்ந்தது

அவளது பயணம்,
இறகழியும்
மேகம் போல்
கரைந்து
கொண்டிருந்தது.
இரக்கமற்ற இரவு அவளை

துயிலடைய விடவில்லை.
விழிகளை களைத்து போட்டன

திரவப்பூச்சிகள்.

மரணத்தின் கொடுவாயில்

கண்களில் படர,
இலவம் பஞ்சு
துகள்
இறகுகளாக முற்றத்து

தாழ்வார உத்திரத்தில்

பதிந்திருந்தது.
தாத்தாவை மட்டும்

காணவில்லை.